சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 160 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
- பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா செல்வதற்காக வந்தார். அவரின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது அவர் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் இருப்பதாக கூறினார்.
ஆனால் அந்த அட்டைப்பெட்டிகள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்தனர். மேலும் அட்டை பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சுங்க அதிகாரிகள் அந்த பயணியின், மலேசியா பயணத்தை ரத்து செய்தனர். விசாரணையில் இந்த நட்சத்திர ஆமைகளை, ஆந்திர மாநிலம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளுக்கு இங்கு ரூ.50 முதல் ரூ. 100 வரையில் விலை ஆனால் மலேசியா நாட்டில் இந்த நட்சத்திர ஆமைகள் ரூ.5 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அங்குள்ள வீடுகளில் நட்சத்திர ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. நட்சத்திர விடுதிகளில், இறைச்சி மற்றும் சூப்புக்காகவும், மருத்துவ குணமுடைய நட்சத்திர ஆமைகளை, மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவதால் கடும் கிராக்கி இருப்பதாக தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.