காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளி -கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை
- கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
- பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
புதுச்சேரி:
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி சென்னை மற்றும் புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 2நாட்களுக்கு தொடர்மழை மற்றும் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை தொடர்ந்து. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர் கிராம மீனவர்கள் சுமார் 12,000- க்கு மேற்பட்டோர் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்று மாலை அவசரமாக கரை திரும்பினார். மழையின் காரணமாக காரைக்காலில் உள்ள பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது .ஒரு சில இடங்களில் சாக்கடைகள் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் மழை நீர் சாலைகளில்தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் காரைக்கால் திருநள்ளார், நெடுங்காடு, சுரக்குடி , திருப்பட்டும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.