அந்தியூர் அருகே இடி தாக்கி 2 வீடுகள் எரிந்து சேதம்
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பச்சாம் பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை மகன்கள் ராஜேந்திரன், சிவகுமார். 2 பேரும் அண்ணன், தம்பிகள். இருவரும் அருகருகே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கூலி வேலைபார்த்து வருகின்றனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பருவாச்சியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு அந்தியூர் மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் மற்றும் சிவகுமார் வீட்டில் இடி தாக்கியது. இதைத்தொடர்ந்து 2 பேர் வீடும் சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எறிய தொடங்கியது.
வீடுகளிலும் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணம், 5 பவுன் நகை, தொலைக் காட்சி பெட்டிகள், கட்டில், பீரோ, பாத்திரங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து கருகிவிட்டன. நல்ல வாய்ப்பாக இடி தாக்கிய போது 2 பேர் வீட்டிலும் ஆட்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ராஜேந்திரன், சிவகுமார் வீட்டை பார்த்து கதறி அழுதனர். அந்தியூர் தாசில்தார் கவியரசு, நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், பச்சாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.