காரைக்காலில் பத்திரப் பதிவாளர் உள்பட 2 பேர் கைது:சி.பி.ஐ., அதிரடி
- பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
- பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில ஆதாரங்களுடன் சி.பி.ஐ.க்கு புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் நேரு வீதியில் உள்ள உதவி பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் பத்திரப் பதிவாளர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு வீதியில் பத்திர பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு புதிய பத்திரப்பதிவுகள் மற்றும் பட்டா மாறுதல் செய்வதற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில ஆதாரங்களுடன் சி.பி.ஐ.க்கு புகார் அளித்துள்ளார். அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை அலுவலக உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த 4 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் காரைக்கால் உதவி பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர். அலுவலக கேட்டை மூடிவிடடு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல் காரைக்கால் ராஜாத்தி நகர் அருகே உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டிலும் நான்கு பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை 3 மணி வரை என விடிய விடிய சோதனை நடைபெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். இதில் பத்திரப்பதிவாளர் சந்திர மோகன், உதவியாளர் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.