மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் நோயாளிகளின் உறவினர்கள் 2 பேர் படுகாயம்
- 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டடம் ஆகும்
- அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்த உறவினர்கள் வேக வேகமாக வெளியேறினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும்.
இங்குள்ள 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டடம் ஆகும். அவசர சிகிச்சை பிரிவில் இருந்து முதற்கட்ட உள்நோயாளியாக இந்த 2 வார்டுகளில் தான் அனுமதிக்கப்படுவார்கள். 4-வது வார்டு பெண் நோயாளிகளும், 5-வது வார்டு ஆண் நோயாளிகளும் அனுமதிக்கப்படுவர். பின்னர் நோய் தன்மைக்கு ஏற்ப பிற வார்டுகளுக்கு மாற்றப்படுவார்கள்.
இந்நிலையில் இன்று இந்த 2 வார்டை ஒட்டியுள்ள வராண்டா பகுதியில் நோயாளிகளின் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர்.
அப்போது திடீரென மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழ தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்த உறவினர்கள் வேக வேகமாக வெளியேறினர்.
இருந்தாலும் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்ததில் தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த கார்த்திக், பாபநாசத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்தனர் .
இவர்கள் இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.