செய்திகள்

சென்னையில் நடைபெற்ற என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

Published On 2016-06-23 09:36 GMT   |   Update On 2016-06-23 09:37 GMT
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சென்னை:

நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்புச் செயலாளர் சேகர் தலைமையில் கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் அளித்திருந்தனர்.

அதன் பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருந்த நிலையில், தொழிலாளர் துறையினர் ஏற்பாட்டின்படி சமரச பேச்சுவார்த்தை 4 கட்டமாக நடந்தது. இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், ஜூன் 1-ந்தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிமாக ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் 5-வது கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடந்தது. இதில் என்.எல்.சி. நிர்வாகிகள், ஏஐடியுசி சங்க நிர்வாகிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க கோரிக்கைகள் ஏற்கப்படாததால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொழிற்சங்க தலைவர் சேகர் பேசும்போது, என்.எல்.சி. நிர்வாகம் செய்யும் எதையும் தொழிலாளர் நலத்துறை தட்டிக்கேட்பதில்லை என குற்றம்சாட்டினார். மேலும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Similar News