திருப்பத்தூரில் தாயுடன் சென்ற இளம்பெண் கடத்தல்: வாலிபர் கைது
சிவகங்கை:
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர் நூர்ஜகான். இவரது மகள் ஷகிலா பானு (வயது29). இவர் அதே பகுதியில் உள்ள விரவனூரை சேர்ந்த சாகுல் அமீது என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நூர்ஜகான் தனது மகளை புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று திருப்பத்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நூர்ஜகான் தனது மகளுடன் வந்தார். திருப்பத்தூர் பஸ் நிலையம் அண்ணாசிலை அருகே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப் போது அங்கு காரில் வந்த ஷாகுல் அமீது உள்ளிட்ட சிலர் ஷகிலாபானுவை கடத்தி சென்றனர்.
உடனே நூர்ஜகான் அங்குள்ள போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
மதகுபட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் மோகன் மற்றும் போலீசார் இளம்பெண் கடத்தப்பட்ட காரை மதகுபட்டி அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த ஷகிலா பானுவை மீட்டு, ஷாகுல் அமீதுவை கைது செய்தனர்.