செய்திகள்

நெருங்கி வரும் நடா புயல்: தமிழகம் முழுவதும் பரவலாக மழை

Published On 2016-12-01 05:33 GMT   |   Update On 2016-12-01 05:33 GMT
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நடா புயல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை:

வங்கக் கடலில் புதுவை அருகே உருவாகி உள்ள நடா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை கரையை கடக்க உள்ளது. வேதாரண்யம்-கடலூர் இடையே புயல் கரை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நடா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை என பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்துவருகிறது.

நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, வேதாரண்யம், ராசிபுரம், திருச்சி, ஜெயங்கொண்டம், லால்குடி, சமயபுரம், மதுரை, பரமக்குடி, ஒட்டன்சத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர், வந்தவாசி, செங்கம், தேவக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துவருகிறது. புதுவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்கிறது.

நடா புயல் காரணமாக கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை பாறைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை காணப்படுகிறது.

Similar News