செய்திகள்

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி விழிப்புணர்வு பயணம்: ஜி.கே.மணி

Published On 2017-08-02 08:14 GMT   |   Update On 2017-08-02 08:14 GMT
அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி அன்புமணி ராமதாஸ் தலைமையில் வருகிற 13-ந்தேதி வாகன விழிப்புணர்வு பயணம் நடைபெறும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி திருப்பூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வெள்ளையனை எதிர்த்து போராடிய தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை ஓடாநிலையில் பா.ம.க. சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் சுதந்திர போராட்ட வரலாறு மாணவர்களுக்கு தெரிய காரணமாக அமையும்.

தமிழகத்தில் தற்போது குடிநீர் பற்றாக்குறை உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் தடுப்பணைகளை கட்டி வருகிறது.

உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகே டெல்லியில் இருந்து அனைவரும் தமிழகத்துக்கு திரும்ப வேண்டும்.

அத்திக்கடவு- அவினாசி குடிநீர் திட்டம் கடந்த 1957-ல் மாரப்ப கவுண்டரால் கொண்டு வரப்பட்டது. காமராஜரால் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த திட்டத்தால் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 35 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.1 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.


எனவே அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 13-ந் தேதி அவினாசியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வாகன விழிப்புணர்வு பயணம் நடைபெறும். இதில் விவசாயிகள், பொது நல அமைப்பினர், பொது மக்கள் கலந்து கொள்கின்றனர்.

கியாஸ் மானியத்தை ரத்து செய்யக்கூடாது. மாதந்தோறும் ரூ.4 விலை கூடினால் ஏழை மக்கள் பாதிப்பார்கள். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் புதிதாக 500 பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலை மிட்டாய், தீப்பெட்டி, பட்டாசு போன்ற பொருட்களை ஜி.எஸ்.டி.யில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News