செய்திகள்

சென்னை சூளையில் வியாபாரியிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்தவர் கைது

Published On 2018-06-02 06:47 GMT   |   Update On 2018-06-02 06:47 GMT
சென்னை சூளையில் வியாபாரியிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை சூளை அங்காள அம்மன்கோவில் தெருவில் அண்ணாமலை சாமி என்பவர் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

அவரிடம் பெரம்பூர் ஸ்டீபன்சன் ரோடு, வடக்கு டவுன் பகுதியை சேர்ந்த பரத்ஷா (59)வும், அவரது கூட்டாளிகளும் அணுகி குரோம்பேட்டையில் கேட்டரிங் தொழில் செய்து வருவதாகவும், அதற்கு அரிசி மொத்த விலைக்கு தேவைப்படுவதாகவும் கூறினர்.

அதனை நம்பி அண்ணாமலைசாமி அரிசி மூட்டைகளை கொடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு தேவையான அரிசியை மொத்தமாக அனுப்பியுள்ளார். அந்த தொகைக்கு பரத்ஷா பணம் தராமல் இழுத்தடித்துள்ளார்.

அதன் பின்னர் காசோலை கொடுத்து அதுவும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. அதனை தொடர்ந்து கேட்டரிங் நிறுவனத்தின் முகவரிக்கு சென்று அண்ணாமலைசாமி விசாரித்த போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து அவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் உதவி கமி‌ஷனர் எஸ்.முத்து வேல்பாண்டி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜுலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தலைமறைவாக இருந்த பரத்ஷா மற்றும் அவரது கூட்டாளியை தேடி வந்தனர்.

கேட்டரிங் நிறுவனமே நடத்தாமல் அரிசியை மொத்தமாக வாங்கி வியாபாரிகளிடம் ரூ.62 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்த பரத்ஷாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News