செய்திகள்
கம்பம் பகுதியில் குடோனில் சிக்கிய ரூ. 5 லட்சம் போதை பொருட்கள்
கம்பம் நகராட்சி பகுதிகளில் குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பம்:
கம்பம் நகராட்சிப் பகுதிகளில் பல்வேறு கடைகளிலும் தடைசெய்யப்பட்ட போதை தரும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து தனிப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கினர்.
விசாரணையில், கம்பம் நகரில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் 2 மொத்த வியாபாரிகள் இருப்பதாக கண்டறிந்தனர். இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மணிநகரம் கிளப் சாலையில் ஒரு குடோனை சோதனை செய்தனர்.
அதில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், புதிய வகை போதை தரும் பேப்பரும் பாக்கெட் பாக்கெட்டாக இருந்ததும், தெரியவந்தது. இதையடுத்து கம்பம்தெற்கு போலீசார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலை மூட்டைகளை கைப்பற்றி, இவற்றின் உரிமையாளரான வெங்கடேசன் (53) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
பறிமுதல் செய்த புகையிலை மற்றும் போதை தரும் பேப்பர் பண்டல்களை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி காஞ்சனாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.