செய்திகள் (Tamil News)

மதவெறி என்ற விஷ விதையை சட்டசபையில் விதைக்க வேண்டாம்- தி.மு.க.வுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Published On 2018-06-27 01:31 GMT   |   Update On 2018-06-27 01:31 GMT
மதவெறி என்ற விஷ விதையை சட்டசபையில் விதைக்க வேண்டாம் என்று தி.மு.க.வுக்கு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். #OPanneerselvam #TNAssembly
சென்னை:

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- இந்த மண்ணில் மதவெறி சக்திகளுக்கு நிச்சயமாக இடமில்லை. தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, பெரியார், அண்ணா பிறந்த மண்ணில் நாம் மத சார்பற்ற சக்திகளை மட்டுமே ஊக்கப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால், சமீப காலங்களில் மதவெறி பிடித்த சக்திகளுக்கு இடமளிக்க கூடிய வகையில் இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- மதவெறிக்கு இந்த அரசு ஆதரவு என்று கூறி விஷவிதையை விதைக்காதீர்கள். அது நாட்டுக்குக் கேடு. அதிக ஆண்டுகள் தி.மு.க.தான் அந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஆட்சி இது. எப்போது நாங்கள் மதவெறி சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறோம்.

இதுபோன்ற போர்வைகளை எல்லாம் எங்கள் மீது போர்த்த வேண்டாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இதுபோன்ற போர்வைகளை எல்லாம் கிழித்து சுக்கு நூறாக்கி இருக்கிறார்கள்.

மத்திய அரசில் நாங்கள் அங்கம் வைத்தோம். ஒரே ஆண்டில் கொள்கை முடிவு எடுத்து ஆதரவை விலக்கினோம். ஆனால் நீங்கள்தான் 5 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வைத்தீர்கள்.



துரைமுருகன்:- நன்றாக முடிவு எடுத்தீங்க. கரசேவைக்கு போய் கல்லு எடுத்து கொடுத்தீங்க.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்றால் யாரிடம் வேண்டுமாலும் போய் சேர்ந்துகொள்கிறீர்கள். அப்போது மதவாதம் தெரியவில்லை. 5 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். உங்கள் மத்திய மந்திரி ஓராண்டு காலம் நினைவில்லாமல் இருந்தாலும், அவரை மந்திரியாக வைத்திருந்தனர். அன்றைக்கு மதவாதம் தெரியவில்லையா. இன்றைக்கு மதவாதம் தெரியுதா? எங்களை பொருத்தவரை ஒரே நிலையில் இருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின்:- சமூக நல்லிணக்கத்தையும், மத நல்லிணக்கத்தையும் போற்றி வளர்த்த மண் இந்த தமிழ்நாட்டு மண். ஆனால், திராவிட இயக்கம் கட்டிக் காத்த மதசார்பற்ற தன்மை மத நல்லிணக்கம் சென்றுவிட்டால் அது நிச்சயம் திரும்ப வராது அது இந்த மண்ணிற்கு நாம் செய்யக்கூடிய துரோகமாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் நாம் திராவிட இயக்கத்தின் சுயமரியாதையை, தன்மானத்தை இழந்துவிடக் கூடாது.

இவ்வாறு விவாதம் நடந்தது. #OPanneerselvam #TNAssembly
Tags:    

Similar News