செய்திகள்

புதுவையில் என்ஜினீயர் வீட்டில் நடந்த கொள்ளையில் துப்பு துலங்கியது

Published On 2018-07-12 15:45 GMT   |   Update On 2018-07-12 15:45 GMT
புதுவையில் என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஜெயிலில் அடைக்கப்பட்ட கொள்ளையனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை ஜீவானந்தம் வீதியில் வசித்து வருபவர் சாந்தன். இவர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுபோல் புதுவை ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியை சேர்ந்த டெய்லர் சுந்தர் என்பவர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளைபோனது.

இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்தும் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருளையன்பேட்டை பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கோட்டக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்த சுந்தர் (வயது 32) என்பவனை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவனிடம் விசாரணை நடத்திய போது, என்ஜினீயர் சாந்தன் மற்றும் டெய்லர் சுந்தர் ஆகியோர் வீடுகளில் கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தான்.

இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த சுந்தரை ஒதியஞ்சாலை போலீசார் இன்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையன் சுந்தர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் வேறு எங்காவது இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளானா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News