செய்திகள் (Tamil News)

பரங்கிமலை ரெயில் விபத்தில் 2 கால்களையும் இழந்த மாணவர் உயிருக்கு போராட்டம்

Published On 2018-07-26 05:33 GMT   |   Update On 2018-07-26 05:33 GMT
பரங்கிமலை ரெயில் நிலையத்தில், மின்சார ரெயிலில் சென்ற போது தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் 2 கால்களையும் இழந்த மாணவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். #StThomasMountStation #TrainAccident
சென்னை:

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி காலை திருமால்பூர் மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பயணிகள் கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதியதில் 10 பயணிகள் கீழே விழுந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் சிவக்குமார், பிளஸ்-2 மாணவர் பரத், தனியார் நிறுவன ஊழியர் நவீன்குமார், வேல்முருகன் ஆகிய 4 பேர் பலியானார்கள்.

கல்லூரி மாணவர் விக்னேஷ், நரேஷ், விஜய், யாசர், மூர்த்தி, ஸ்ரீவர்‌ஷன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களின் உடல்களும், காயம் அடைந்தவர்களும் சிதறி கிடந்தனர்.

இதில் பலியானவர்களில் 2 பேருக்கு தலை துண்டானது. கால்களும் துண்டாகி கிடந்தது.

காயம் அடைந்த ஸ்ரீவர்ஷனுக்கு இரண்டு கால்கள் விஜய்க்கு வலது காலில் பாதம் துண்டானது. மற்றவர்கள் தலையில் பலத்த காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களையும், சிதறி கிடந்த கால்கள் மற்றும் உறுப்புகளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நரேஷ், விக்னேஷ் ஆகியோர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டனர்.


இரண்டு கால்களையும் இழந்த ஸ்ரீவர்‌ஷன், விஜய், யாசர், மூர்த்தி ஆகியோர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்ரீவர்‌ஷனின் துண்டான கால்கள் பற்றி டாக்டர்கள் கேட்டபோது, அவை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

அங்கு பலியானவர்களின் உடலோடு தலை, கால்களை பொருத்தி பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டு இருந்தது.

இதையடுத்து அவரின் கால்களை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டனர். உடனே ஸ்ரீவர்‌ஷன் அணிந்திருந்த பேண்ட்டை அடையாளமாக வைத்து அவரது கால்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஐஸ் பேக்கில் வைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இரண்டு கால்களும் மிகவும் சிதைந்து இருந்ததால் ஸ்ரீவர்‌ஷனுக்கு பொருத்த முடியவில்லை.

இதையடுத்து ஸ்ரீவர்‌ஷனுக்கு காலில் ஆபரேசன் செய்யப்பட்டது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் அடைந்தபோது ரத்தம் அதிகம் வெளியேறியதால் உயிருக்கு போராடி வருகிறார்.

பிளஸ்-2 முடித்துள்ள மாணவர் ஸ்ரீவர்‌ஷன் தனது நண்பர் விஜய்யுடன் கிண்டியில் உள்ள பள்ளிக்கு சென்ற போது ரெயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்தது தெரிய வந்தது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
Tags:    

Similar News