இந்தியா (National)

திருப்பதியில் லட்டு நெய் தரம் அறிய ரூ.75 லட்சத்துக்கு நவீன ஆய்வகம்

Published On 2024-09-21 04:55 GMT   |   Update On 2024-09-21 04:55 GMT
  • நெய் போன்று தோற்றம் அளிக்கும் ஆனால் அது உண்மையான நெய் இல்லை.
  • நெய்யின் தரத்தை பரிசோதிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி:

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்திய உண்மை தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்பட்டது.

லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை. நெய் போன்று தோற்றம் அளிக்கும் ஆனால் அது உண்மையான நெய் இல்லை.

அதில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் கலந்து உள்ளன என தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த ஜூலை 6-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தோம்.

ஒரு வாரம் கழித்து அதன் பரிசோதனை முடிவுகள் வந்தன. பரிசோதனை முடிவில் தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெயில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

அதில் பன்றி இறைச்சி கொழுப்பு, மாட்டு இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், ஆலிவ் ஆயில் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படும் நெய்யின் தரத்தை பரிசோதிக்க வெளிநாட்டிலிருந்து ரூ.75 லட்சம் மதிப்பில் உபகரணங்களை வாங்கி சொந்தமாக புதிய ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நெய்யின் தரத்தை பரிசோதிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும் தரமான நெய் மற்றும் பொருட்கள் கொண்டு தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News