டெல்லி முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் அதிஷி
- தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ள அதிஷி டெல்லியின் இளைய முதல்வர் ஆவார்.
- அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் கடந்த 155 நாட்களாக திகார் சிறையில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வெளியே வந்த கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அதிஷியை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை அன்று கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து துணை நிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அதிஷி உரிமை கோரினார்.
இந்த நிலையில், டெல்லி முதல்வராக அதிஷி இன்று மாலை பதவியேற்பார் என்றும் அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா மாலை 4.30 மணிக்கு ராஜ் நிவாஸில் நடைபெறுகிறது.
தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ள அதிஷி டெல்லியின் இளைய முதல்வர் ஆவார். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தா பானா்ஜியை தொடா்ந்து, நாட்டின் தற்போதைய இரண்டாவது பெண் முதல்வராகவும் அதிஷி தேர்வாகியுள்ளார்.
இதற்கிடையே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அதிஷியை டெல்லி மாநில முதல்வராக அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்.