உலகம் (World)

செல்போன்கள் பயன்படுத்த குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்த நாடு...

Published On 2024-09-21 03:48 GMT   |   Update On 2024-09-21 03:48 GMT
  • ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது.
  • வீதியில் வந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் இன்று செல்போனே கதி என்று கிடக்கிறார்கள்.

ஒரு காலத்தில் வீடுகளில் தொலைபேசி இருந்தாலே அவர்களை பெரிய பணக்காரர்களாக பார்ப்பார்கள். அந்த தொலைபேசி படிப்படியாக வளர்ந்து தற்போது செல்போன்களாக உருவெடுத்து விட்டன.

இன்றைய விஞ்ஞான உலகில் அனைத்தும் கையில் அடக்கம் என்பது போல செல்போன்கள் உள்ளன. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் இன்று வளர்ச்சி அடைந்து, பொழுதுபோக்கு, அறிவியல் அறிவு, விளையாட்டு, தொழில் என அனைத்து தகவல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

செல்போன் என்பது பலருக்கும் ஆறாவது விரலாகி விட்டது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன்கள் வருவதற்கு முன்பெல்லாம் குழந்தைகளுக்கு தாய்மார்கள் நிலாவை காண்பித்து சோறு ஊட்டுவார்கள். விளையாட்டு காண்பித்தும், கதைகளை கூறியும் உணவு அளித்தார்கள். ஆனால் இன்றோ தலைகீழாக மாறி விட்டது. குழந்தைகள் உணவு சாப்பிட பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகள் சாப்பிட்டால் போதும் என்று நினைக்கும் பெற்றோர், செல்போனை கொடுப்பதால், நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகின்றன. பின்னர் செல்போன் கொடுக்காவிட்டால் அடம்பிடிக்கின்றன.

குழந்தைகள் நிலைமை இவ்வாறு என்றால் இளம்பெண்கள், இளைஞர்களின் நிலைமை ரீல்ஸ்மோகம். அதுமட்டுமின்றி செல்பி மோகமும் அதிகரித்து விட்டது. இதனால் சமீபகாலமாக செல்போன்களால் பலரும் பாதிப்படைந்து வருகிறார்கள். செல்போன்களால் நன்மைகள் இருந்தாலும், அதில் தீமைகளும் அதிகமாகதான் இருக்கின்றன. பள்ளி மாணவ-மாணவிகள் செல்போனை நீண்ட நேரம் பார்ப்பதால் அவர்களது படிப்பு பாதிக்கப்படுகிறது. செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்தால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

முதலில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அதற்கு பெற்றோர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக நேரம் செல்போன்களை பார்ப்பதால், குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை, பார்வை குறைபாடு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் விளைவு மோசமாகி விடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். வீதியில் வந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் இன்று செல்போனே கதி என்று கிடக்கிறார்கள். இதனால் அவர்களது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகள் குழந்தைகள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்க ஆலோசித்து வருகின்றன. இதில் தற்போது சுவீடனில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. போன்றவற்றை பார்க்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரமும், 6 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 2 மணி நேரம் வரையும் செல்போனை பயன்படுத்தலாம். 13 முதல் 18 வயதுடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை செல்போனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என பெற்றோருக்கு சுவீடன் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதை பெற்றோர் தான் நடைமுறை படுத்த வேண்டும்.

இதேபோல ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "சமூக ஊடகங்கள் சிறுவர்களின் சமூக சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அறிந்ததே. சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதன் மூலம் உண்மையான நண்பர்களிடம் இருந்தும், உணர்வுபூர்வமான அனுபவங்களில் இருந்தும் விலகி விடுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்வதற்கான சட்டபூர்வ வழிகளை ஆராய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் குழு ஒன்றை ஆஸ்திரேலியா அரசு அமைத்துள்ளது. இந்த சமூக ஊடகங்களை சிறுவர்கள் செல்போன்கள் மூலமாக தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அந்த இளைஞர்கள் தற்போதைய குழந்தைகள். தற்போதே குழந்தைகள் செல்போன்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது என்று சுவீடன், ஆஸ்திரேலியா நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதே போன்று நம்நாட்டிலும் செல்போன்களை பயன்படுத்த குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கலாம். அவ்வாறு விதிக்கப்படும் போது அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். இது போன்ற நடவடிக்கை சமூக நலன்களுக்கும் வழிவகுக்கும். குற்றச்சம்பவங்களும் குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

எனவே நமது நாட்டில் குழந்தைகள், மாணவ பருவத்தினர் படிப்பு மற்றும் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதை நடைமுறை படுத்துவது பெற்றோர் கையில்தான் உள்ளது. எது எப்படியோ எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது என்பார்கள். அதை ஸ்மார்ட் போன்கள் விழுங்கி விடக்கூடாது என்பது பலரது எண்ணம். இந்த எண்ணம் நிறைவேறுமா?

Tags:    

Similar News