செய்திகள்

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தனி கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் - டி.டி.வி.தினகரன்

Published On 2018-07-26 08:01 GMT   |   Update On 2018-07-26 08:01 GMT
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தனி கூட்டணி அமைத்து சந்திப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDhinakaran
ஆலந்தூர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதாவினர் ஊழல் செய்யாதவர்கள் போல பேசி வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜனதா கால் ஊன்றவும், நிர்மலா சீத்தாராமனை தமிழக முதல்-அமைச்சராக்கவும் திட்டமிடுகிறார்கள். ஓ.பி.எஸ். சகோதரருக்காக ராணுவ விமானம் கொடுத்தது பற்றி மத்திய மந்திரிதான் விளக்க வேண்டும்.

அம்மா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ். முதல்-அமைச்சர் ஆனார். அதற்கு காரணமான வரையே காட்டிக் கொடுத்தார். அம்மா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு காரணமாக இருந்து அம்மாவின் மரணத்தையே அசிங்கப்படுத்தினார்.

தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் ஓ.பி.எஸ். எந்த துரோகமும் செய்வார். யாரையும் காட்டிக் கொடுப்பார். அதுபோல்தான் ராணுவ விமானம் கொடுத்து உதவி செய்தவரை காட்டிக் கொடுத்து இருக்கிறார்.



ஓ.பி.எஸ். சொத்து குவிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அவருடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும். பல உண்மைகள் அம்பலமாகும்.

இதுபோல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்ற அமைச்சர்கள் பற்றியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் பல உண்மைகள் மக்களுக்கு தெரிய வரும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு 3-வது இடம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அதை முறியடித்து எனது தொண்டர்களின் உழைப்பால் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தனி கூட்டணி அமைத்து சந்திப்போம். இதில் எங்களுடன் பல கட்சிகள் இணைந்து செயல்படும்.

நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சட்டசபை தேர்தலில் எங்களுக்கு 200 இடங்கள் கிடைக்கும். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி காட்டுவோம்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. எனவே, இதில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran

Tags:    

Similar News