செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31 ஆயிரத்து 411 கன அடியாக சரிவு

Published On 2018-07-30 06:41 GMT   |   Update On 2018-07-30 06:41 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 59 ஆயிரத்து 135 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 31 ஆயிரத்து 411 கன அடியாக சரிந்தது.
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது.

இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 25 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை கடந்த 23-ந் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 59 ஆயிரத்து 135 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 31 ஆயிரத்து 411 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து நேற்று 59 ஆயிரத்து 714 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பும் 33 ஆயிரத்து 970 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று 120.25 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120.20 அடியாக இருந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.இதற்கிடையே நேற்று மாலை முதல் மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 40 ஆயிரத்து 780 கன அடியும், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் 75 ஆயிரத்து 780 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த தண்ணீர் நாளை காலை மேட்டூருக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News