செய்திகள்

நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் - திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-08-24 07:24 GMT   |   Update On 2018-08-24 07:24 GMT
நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #TamilnaduHighWays #Thirunavukkarasar

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளையால் தான் திருச்சி முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தன.

இதேபோன்று மேலும் பல அணைகள், மணல் கொள்ளையால் சேதமாகி உறுதிதன்மையை இழந்துள்ளது. அணைகளை சரிசெய்ய தலை சிறந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்.

மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்க வேண்டும். முக்கொம்பு அணையில் ஏற்பட்டதை போல் எதிர் காலத்தில் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காவிரி தண்ணீர் கடைமடை வரை செல்லாததற்கு சரியான பராமரிப்பு இல்லாதது தான் காரணம். இதனை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கமி‌ஷன் வாங்குவதிலேயே குறியாக உள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள நெடுஞ்சாலையைத் துறையில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர போவதாக ஸ்டாலின் கூறி இருக்கிறார். நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது.

மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். காவல்துறை பணி சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கவனிப்பது தான்.

அதைவிடுத்து, அமைச்சர்கள் எங்கு சென்றாலும் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பாக குவிக்கப்படுவது சரியில்லை. உதாரணத்திற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி, கருணாநிதி இறுதி நிகழ்ச்சியில் வந்த போது, காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News