செய்திகள்

கிணத்துக்கடவு அருகே தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-08-27 12:25 GMT   |   Update On 2018-08-27 12:25 GMT
கோவை கிணத்துக்கடவு அருகே கோவிலில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.
கிணத்துக்கடவு:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). விவசாயி.

இவர் அதே பகுதியில் உள்ள ஆற்றுகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து கிடா விருந்து வைக்க திட்டமிட்டார். இதற்காக நேற்று உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள ஆலமரத்துக்கு அடியில் பெண்கள் பொங்கல் வைத்து கொண்டு இருந்தனர்.

அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் வெளியேறியது. ஆக்ரோசமாக காணப்பட்ட தேனீக்கள் கூட்டம் பொங்கல் வைத்து கொண்டு இருந்தவர்கள், அங்கு அமர்ந்து இருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் அனைவரும் சிதறியடைத்து ஓடினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தேனீக்கள் கொட்டியதில் ரவிச்சந்திரன், அவரது மனைவி கலாமணி, மகன் லோகமுருகன், உறவினர்கள் சந்திரகுமார், தவமணி உள்பட 30 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் கோவை, பொள்ளாச்சி மற்றும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சேர்ந்தனர். அங்கு இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News