வண்ணாரபேட்டை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார்.
நேற்று இரவு தனது நண்பர் நித்தியானந்தம் (25) என்பவருடன் திருவனந்தபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
வண்ணாரப்பேட்டை- காசிமேட்டுக்கும் இடையே சூரிய நாராயண ரோட்டில் வந்தபோது மாநகர பஸ்சை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த கோபி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த நித்தியானந்துக்கு கால் எலும்பு முறிந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விபத்தில் பலியான கோபிக்கு உடலில் காயம் எதுவும் இல்லை. தலையில் மட்டுமே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் ஹெல்மெட் அணியவில்லை. அணிந்திருந்தால் தலையில் அடிபட வாய்ப்பில்லை. அவர் உயிர் பிழைத்து இருப்பார். எனவே இரு சக்கர வாகனம் ஓட்டு பவர்களும், பின்னால் அமர்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தங்கள் இன்னுயிரை காத்து கொள்ள வேண்டும் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.