செய்திகள்

திருப்பூரில் மருந்து கடை அதிபரை தாக்கி ரூ.9½ லட்சம் கொள்ளை

Published On 2018-11-26 12:56 GMT   |   Update On 2018-11-26 12:56 GMT
திருப்பூரில் மருந்து கடை அதிபரை தாக்கி ரூ.9½ லட்சம் பணத்தை காரில் வந்த மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.

திருப்பூர்:

திருப்பூர் மங்களம் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது28). இவர் கணியாம் பூண்டியில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையில் இருந்த ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்தை பையில் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

பாரதிபுரம் என்ற இடத்தில் கேசவன் வந்தபோது காரில் பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிளை வழிமறித்த கும்பல் ஆயுதங்களை காட்டி பணத்தை தருமாறு மிரட்டினர். கேசவன் பணத்தை தர மறுத்தார்.

இதில் ஆத்திரமடைந்த கும்பல் கேசவனை தாக்கி அவரிடம் இருந்த ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்தனர். அதிர்ச்சியடைந்த கேசவன் சத்தம் போட்டார்.

இரவு நேரம் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை. இதனால் பணத்தை கொள்ளையடித்த கும்பல் மின்னல் வேகத்தில் காரில் தப்பினர்.

இது குறித்து கேசவன் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருந்து கடை உரிமையாளர் பணம் கொண்டு வருவதை நோட்டமிட்டு இந்த கொள்ளை நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News