செய்திகள்

சாதிக் பாட்சா மரணம் பற்றி மறு விசாரணை தேவை - ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக மனைவி பேட்டி

Published On 2019-04-13 01:09 GMT   |   Update On 2019-04-13 01:09 GMT
சாதிக் பாட்சா மரணம் குறித்து மறுவிசாரணை நடத்தவேண்டும் என்று ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்தியதாக அவருடைய மனைவி ரேஹாபானு கூறினார். #SathikBasha
சென்னை:

‘2ஜி’ வழக்கு விசாரணை நடந்தபோது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுபற்றி அவரது மனைவி எஸ்.ரேஹாபானு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என் கணவர் இறந்து 8 வருடங்கள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளாக எனக்கு வந்த கொலை மிரட்டல்கள், கஷ்டங்கள் வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்தது. கொலை மிரட்டல்களுக்கு தி.மு.க. பின்புலமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு எனக்கு பல ஆண்டுகள் ஆனது. அவர் எப்படி இறந்தார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. விசாரணையில் எங்களை அழைத்துத்தான் அதிகம் விசாரித்தார்கள். அதனால் மன ரீதியாக நான் நிறைய பாதிப்பு அடைந்தேன்.

அதற்குபிறகும் சரியான நியாயம் கிடைக்கவில்லை. எங்களுக்கு சொந்தமான கம்பெனியை முன்னாள் மத்திய மந்திரி (ஆ.ராசா) எடுத்துக்கொண்டார். அதையும் பெற போராடினேன். என் கணவர் நினைவுநாளில் ‘கூடா நட்பு கேடாய் முடியும்...!’ என்று விளம்பரம் கொடுத்தேன். அதன்பிறகு என்னையும் கொலைவெறியோடு தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதேநிலை தொடர்ந்தால் நானும், குழந்தைகளும் தற்கொலை செய்துவிடுவோமா என்ற பயம் வந்தது. அதைத்தொடர்ந்து தான் ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அவர் என் மனுவை கருணையோடு ஏற்றுக்கொண்டார். போலீசாரும் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் விரைவில் சந்திக்க இருக்கிறேன்.

நான் தேர்தல் நேரத்தில் எதுவும் பேசக்கூடாது என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைத்து இருக்கிறார்கள். என் கணவரை மீண்டும் ஞாபகப்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இதன் பின்புலத்தில் ஆ.ராசா தான் இருக்கிறார். எங்களுக்கு வேறு யாரும் எதிரிகள் கிடையாது. என் கணவருக்கு அழுத்தம் அதிகம் இருந்தது.



தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சாகித் பல்வானும் சந்தித்து இருக்கிறார்கள். அதை சி.பி.ஐ.யிடம் என் கணவர் வாக்குமூலமாக சொல்லி இருக்கிறார்.

அதனால் அவருக்கு அழுத்தம் இருந்தது. தேர்தலுக்கும், என்னுடைய பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 8 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். என் கணவரும், ஆ.ராசாவும் நட்புடன் இருந்தார்கள். கணவர் இறந்த பிறகு அவர் வந்து எந்த ஆறுதலும் சொல்லவில்லை.

‘2ஜி’ வழக்கில் என் கணவர் கொடுத்த சாட்சியம் தான் முக்கியமாக இருந்தது. அதனால் அவருக்கு வந்த அழுத்தத்தினால்தான் தற்கொலை செய்து கொண்டார். ‘2ஜி’ வழக்குக்கும், என் கணவர் தற்கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறது. எனவே என் கணவர் மரணம் குறித்தும், ‘2ஜி’ வழக்கு பற்றியும் மறு விசாரணை நடத்தவேண்டும் என்றும், என்னுடைய பாதுகாப்புக்காகவும் ஜனாதிபதியை நேரில் சந்தித்தேன். என் மீது நிறைய பொய் வழக்குகள் போட்டும், மொட்டை கடிதங்கள் அனுப்பியும், ஆ.ராசாவின் கையாட்களான குமார், கவுதம் உள்பட 3 பேர் என்னை காயப்படுத்தி இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்துதான் இதுபோன்ற மிரட்டல் வருகிறதா என்பதை விசாரிக்கவேண்டும். என் கணவருடைய வழக்கை சி.பி.ஐ. முறையாக விசாரணை செய்தது. இன்னும் சிலரை விசாரித்து இருக்கலாம். என் கணவருடைய தற்கொலைக்கு யார் காரணம் என்று ஒரு நபரை குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆ.ராசாவுடன் நட்புடன் இல்லாமல் இருந்திருந்தால், என்னுடைய கணவர் இப்போது உயிருடன் இருந்திருப்பார். நானும், என் குழந்தைகளும் சந்தோஷமாக இருந்திருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ரேஹாபானுவின் வக்கீல்கள் உடன் இருந்தனர்.#SathikBasha
Tags:    

Similar News