இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக் கோரிய மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
- வாட்ஸ்அப் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
- செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாட்ஸ்அப் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
அந்த மனுவில், குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதி, 2021-க்கு இணங்க மறுத்துவிட்டதாகவும், இதனால் வாட்ஸ்அப் செயலியின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் அரசியல் அமைப்பின் 21-வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வாட்ஸ்அப் மீறி வருவதாகவும், தேசிய நலன் மற்றும் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "வாட்ஸ்அப் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பவில்லை என்றாலோ, அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை என்றாலோ, அதை நாட்டில் செயல்பட அனுமதிக்கக்கூடாது. நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் பல வலைதளங்கள், செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.