ஊட்டி-மேட்டுப்பாளையம் ரோட்டில் இரவு நேரத்தில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானை
மேட்டுப்பாளையம்:
கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. தற்போது கோடைகால சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.செடி கொடிகள் காய்ந்து சருகாகி விட்டன.நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி குறைந்து காணப்படுகின்றது.
இதனால் உணவு மற்றும் நீர்நிலைகளைத்தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய விளை பொருள்களை நாசம் செய்து வருகின்றது.
இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை மற்றும் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை வாகன போக்குவரத்தில் முக்கியப்பங்கு வகித்து வருகின்றது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலைகளில் வந்தும் சென்றும் கொண்டிருக்கின்றன.
மேலும் இந்த 2 சாலைகள் காட்டுயானைகள் மற்றும் பிற வன விலங்குகள் கடந்து செல்லும் சாலைகளாகவும் உள்ளது.இதுதவிர மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் சாலையைக்கடந்து செல்வது தினசரி வழக்கமாக நடைபெற்று வருகின்றது.
ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கியதால் காலை ஊட்டிக்கு சென்ற வாகனங்கள் மீண்டும் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தன.அப்போது மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கல்லாறு அருகே வழக்கம்போல் ஒற்றை காட்டு ஆண்யானை சாலையைக்கடக்க சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.யானையைக்கண்டதும் அந்த வழியே சுற்றுலாப் பயணிகளுடன் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்து அந்தந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி யானையை வேடிக்கை பார்த்தார்கள்.
ஒருசிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.ஒரு சில யானைகள் வாகனங்களின் முகப்பு வெளிச்சம் மற்றும் ஹாரன் சப்தத்தைக்கேட்டு மிரண்டோடும்.ஆனால் இந்த யானைக்கு இவைகள் பழக்கப்பட்டு விட்டதால் பொருட்படுத்தாமல் மெல்ல ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து சாலையை மெல்ல மெல்ல கடந்து சாலையோரத்தில் இருந்த விடுதியைக்கடந்து கல்லாறு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.அதன்பின்னர் மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.
யானை சாலையைக் கடந்து செல்லும் போது சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காட்டுயானை சாலையைக் கடந்து செல்லும் போது வாகனஓட்டுனர்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.