செய்திகள்
மின்சார ரெயில்

ஊரப்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது- மின்சார ரெயில் சேவை பாதிப்பு

Published On 2021-04-03 06:33 GMT   |   Update On 2021-04-03 06:33 GMT
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு புறப்படக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டன. ரெயில் சேவை பாதிக்கப்பட்டது குறித்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
சென்னை:

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்ததால் மின்சார ரெயில் சேவை மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழியில் நின்றன.

ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகில் ரெயில்களை இயக்கக்கூடிய உயர் அழுத்த மின்கம்பி இன்று காலை 7 மணி அளவில் அறுந்து விழுந்தது. இதனால் செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை மற்றும் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நின்றன.

உயர் அழுத்த மின்சார வயர் துண்டானதால் மின்சப்ளை இல்லாமல் ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து ரெயில்வே தொழில்நுட்ப வல்லுனர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சரிசெய்யும் போது மற்றொரு வழித்தடத்தின் மின்பாதை கம்பியும் அறுந்தது. இதனால் 2 வழித்தடத்திலும் ரெயில்களை இயக்க முடியாமல் போயின.



செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு புறப்படக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டன. ரெயில் சேவை பாதிக்கப்பட்டது குறித்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. மின் கம்பி அறுந்ததால் ரெயில் சேவை தாமதம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் சென்னைக்கு வரக்கூடியவர்கள் ரெயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்து நின்றனர் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஒவ்வொரு ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

தென் மாவட்டங்களில் இருந்து வந்த அனைத்து ரெயில்களும் இந்த சம்பவத்துக்கு முன்பு கடந்து சென்றதால் தாமதமின்றி தப்பின. புதுச்சேரி - எழும்பூர் ரெயில் வழியில் நிறுத்தப்பட்டன. எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி ரெயில்களும் வழியில் நின்றன.

எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை விட மின்சார ரெயில் பயணிகள் அதிக அளவு சிரமப்பட்டனர். கடற்கரை - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - கடற்கரை இரு மார்க்கமும் மின்சார ரெயில் சேவை பல மணி நேரம் தடைபட்டதால் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் காத்து நின்றனர் அறுந்து விழுந்த மின்கம்பியை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Similar News