புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன- சென்னையில் கடற்கரைகள் வெறிச்சோடின
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டு உள்ளன.
சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரையின் மணல் பகுதி மற்றும் சர்வீஸ் சாலைகளில் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மெரினா கடற்கரையில் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் ஆகியோர் வழக்கம் போல வந்தனர். அவர்கள் கடற்கரை பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் சாலையோர பிளாட்பாரங்களில் மட்டும் உடற்பயிற்சி செய்யவும், நடைபயிற்சி செய்யவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மணற் பரப்புக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பொது மக்கள் நுழையாமல் இருக்க தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. பொது மக்கள் யாரையும் கடற்கரை பகுதிக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. கடற்கரைக்கு வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். இதன் காரணமாக கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அதேபோல் சென்னை நகரம் முழுவதும் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று மூடப்பட்டன. பூங்காவுக்குள் பொது மக்கள் இன்று அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் உள்ள பூங்காக்களில் தினமும் காலையில் ஆயிரக்கணக்கானவர்கள் நடைபயிற்சி செய்வது வழக்கம். இன்று பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதால் பூங்காவை சுற்றியுள்ள வெளிப்புற பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் இன்று காலையில் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
பூங்காக்களில் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்பவர்களுக்கென்று தனி நண்பர்கள் வட்டாரங்கள் உள்ளன. இன்று காலை சாலை ஓரங்களில் நடைபயிற்சி சென்றவர்கள் கொரோனாவால் தங்கள் நண்பர்களை சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடனேயே நடைபயிற்சி மேற்கொண்டனர்.