செய்திகள் (Tamil News)
உடுமலை வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரம்பி இருக்கும் காட்சி.

வனவிலங்குகளின் தாகத்தை தணித்த மழை

Published On 2021-05-20 07:01 GMT   |   Update On 2021-05-20 07:01 GMT
உடுமலை வனப்பகுதியில் பெய்த மழையால் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை சற்று பூர்த்தியடைந்துள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள்  உள்ளன.  இது தவிர அரிய வகை உயிரினங்கள், மூலிகைகள், தாவரங்களும் வனப்பகுதியில் உள்ளது.

இந்தநிலையில் கோடை காலத்தில் வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் யானை உள்ளிட்ட விலங்குகள்  தண்ணீர் தேடி அவ்வப்போது அமராவதி அணைக்கு கூட்டமாக வரும். கடந்த  2 மாதங்களாக யானைகள் கூட்டம் அமராவதி அணைக்கு படையெடுத்தன. இதனால் உடுமலை-மூணாறு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர்  அறிவுறுத்தினர்.

இதனிடையே கடந்த 2வாரங்களுக்கு முன்பு தண்ணீருக்காக உடுமலை  வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் மீது மலைவாழ் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கற்களை கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து 5பேர் மீது வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டதுடன்,மலைவாழ் மக்களுக்கும் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    
இதனிடையே உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில் கடந்த  8-ந்தேதி முதல் கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.இதில் உடுமலை வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள், செந்நாய் கூட்டங்கள், 250க்கும் மேற்பட்ட யானைகள், 150க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள், மான் கூட்டங்கள் இருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில்தெரிவிக்கப்பட்டது. கணக்கெடுப்பின் போது  வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையில்  களமிறங்கினர்.
  
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியடைந்துள்ளது. இதன் மூலம் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேற சாத்தியமில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News