இந்தியா

மண்டல-மகர விளக்கு சீசன்: பக்தர்களின் வருகைக்கு ஏற்ப தரிசன எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

Published On 2024-10-18 02:48 GMT   |   Update On 2024-10-18 02:48 GMT
  • நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம்:

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று காலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5 நாள் நடைபெறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு கோவில் நடை 21-ந்தேதி இரவு அடைக்கப்படும்.

இந்தநிலையில், சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சீசன் நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விபத்தில் மரணம் அடைய நேரிட்டால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையினை காப்பீட்டு நிறுவனத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் செலுத்தும். விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவு தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினசரி கூலி தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News