செய்திகள்
மல்லிகை பூக்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் 1,700 ரூபாய்க்கு விற்பனை

Published On 2021-11-03 07:42 GMT   |   Update On 2021-11-03 07:42 GMT
தீபாவளிக்கு மக்கள் விரும்பி வாங்கும் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட மலர்கள் சுமார் ஒரு டன் என்ற அளவிலேயே விற்பனைக்கு வந்தது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்தது.
மதுரை:

மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 100 டன்னுக்கும் அதிகமான மலர்கள் இந்த சந்தைக்கு விற்பனைக்கு வருவது வழக்கம்.

தீபாவளி உள்ளிட்ட விசே‌ஷ நாட்களில் கூடுதல் மலர்கள் விற்பனைக்கு வரும். மதுரை உள்ளிட்ட அண்டை மாவட் டங்களில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செடிகளில் பூக்கள் மலராமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று பூ மார்க்கெட்டுக்கு சுமார் 5 டன் அளவு மலர்கள் மட்டுமே வந்தன.

குறிப்பாக தீபாவளிக்கு மக்கள் விரும்பி வாங்கும் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட மலர்கள் சுமார் ஒரு டன் என்ற அளவிலேயே விற்பனைக்கு வந்தது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்தது. ஆனாலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டாததால் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது.

மதுரை மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ 1,700 ரூபாய்க்கும், முல்லை 1,500 ரூபாய்க்கும், பிச்சி 1,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அரளி 250 ரூபாய்க்கும் சிவந்தி 200 ரூபாய்க்கும், செண்டு பூக்கள், மரிக்கொழுந்து 100 ரூபாய்க்கும், சம்பங்கி 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. சிவந்தி மற்றும் சீசன் மலர்கள் மழை காரணமாக அழுகிய நிலையில் காணப்பட்டது.

இந்த மலர்களை பொதுமக்கள் யாரும் வாங்க ஆர்வம் காட்டாததால் வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களில் கொட்டினர்.

இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து குப்பை மேடாக மார்க்கெட் காட்சி அளிப்பதுடன் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில நாட்களாக அந்த பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால் மலைபோல குப்பைமேடு காட்சியளிக்கிறது. இதனால் மழை காலங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News