செய்திகள்
வாழை மரக்கன்றுகள் நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தார்சாலை அமைக்க கோரி வாழை மரக்கன்றுகள் நட்டு பொதுமக்கள் போராட்டம் - அவினாசி அருகே பரபரப்பு

Published On 2021-11-13 08:43 GMT   |   Update On 2021-11-13 10:40 GMT
வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.15.40 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், மங்கலம் சாலை பிரிவில் இருந்து அம்மாபாளையம் எம்.ஜி.ஆர் நகர் வரை குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.  

இச்சாலை அவிநாசி ஊராட்சி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கலம் சாலை பிரிவில் இருந்து முக்கால் கிலோ மீட்டரும்,  திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இரண்டு கிலோமீட்டர் அளவும் இணைப்பு சாலையாக உள்ளது.

இந்நிலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தார் சாலை தோண்டப்பட்டதால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக சேறும் சகதியுமாக உள்ளதால் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகி இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வந்தனர். 

இதையடுத்து தார்சாலையை உடனடியாக சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவிநாசி ஒன்றிய நிர்வாகம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் என இருதரப்பினரிடம் தொடர்ந்து மனு
கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உமையசெட்டிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் வாழை மரக்கன்றுகள் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதில் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.15.40 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.  

அப்போது அங்கு வந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் இரு இடங்களில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற்றவுடன் விரைவில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் தேவராஜன் தலைமை வகித்தார். 

மாவட்ட குழு உறுப்பினர் எஸ். வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாமியப்பன், முன்னாள் கிளைச் செயலாளர் வெங்கடாசலம், கிளைச் செயலாளர் வையாபுரி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News