உள்ளூர் செய்திகள் (District)
முதலமைச்சர் முக ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை

Published On 2022-03-22 05:14 GMT   |   Update On 2022-03-22 07:15 GMT
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 31-ந் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள், தளர்வுகள் முடிவடைய உள்ளது. எனவே அடுத்த மாதத்தில் இருந்து என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள், வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக தலைவர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அரசு சார்பில் விரிவான அறிவிப்பாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

Similar News