உள்ளூர் செய்திகள்
கைதான தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன்.

சிறுமிக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

Published On 2022-05-08 09:50 GMT   |   Update On 2022-05-08 09:50 GMT
நாகை அருகே சிறுமிக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் மட்டுமே கொண்ட பள்ளியில் வேதாரண்யம் அடுத்துள்ள தகட்டூரை சேர்ந்த தமிழ்செல்வன் (58) பள்ளி தலைமையாசிரியராகவும், ஆசிரியையாக தேவகி (47) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்‌.

இந்நிலையில் மது போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் அப்பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் குளத்தில் தள்ளி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. 

இதனால் பெற்றோரிடம் சொல்லத் தயங்கிய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து தனது மகளிடம் தாயார் விசாரித்ததில் தலைமையாசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து புகார் அளிக்க சென்ற பெற்றோரிடம் அந்த ஆசிரியர்க்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு மிரட்டியும், பணம் தருவதாக சொல்லியும் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நாகை மாவட்ட குழந்தைகள் சேவை அமைப்பு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நேரடியாக சிறுமியின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று பாலியல் தொந்தரவு நடந்துள்ளது என்பதை உறுதி படுத்தினர். 

இதுதொடர்பாக நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமையாசிரியரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் தமிழ்செல்வன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். 

மேலும் அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை தேவகியை வேறு பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.மேலும் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News