ஆடி அமாவாசையையொட்டி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தனியார் வாகனங்களுக்கு 3 நாட்கள் அனுமதி-ஆலங்குளத்தில் இருந்து பக்தர்கள் புறப்பட்டனர்
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் தெரிவித்து, அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார்.
- இன்று முதல் 3 நாட்களுக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆலங்குளம்:
பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அனுமதி மறுப்பு
இந்த ஆண்டும் கால்நாட்டுதல் வைபவத்துடன் திருவிழா தொடங்கி உள்ளது. வழக்கமாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதிக அளவில் அங்கு சென்று தங்கி இருந்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு அங்கு செல்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே தனியார் வாகனங்களுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் குறைந்தது 3 நாட்களாவது தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
அமைச்சரிடம் கோரிக்கை
தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் தெரிவித்து, அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியாவிடம் பேசியதன் பேரில் இன்று முதல் 3 நாட்களுக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.