குழந்தையை கொன்ற கொடூர தந்தை ஜெயிலில் அடைப்பு
- மறுநாள் காலையில் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தனர்.
- கைதான தங்கராஜ் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கோவை:
கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). பெயிண்டர்.
இவரது மனைவி புஷ்பா (35). இவர்களுக்கு ஹரிணி (9), சிவானி (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். தங்கராஜ், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதேபோல் சம்பவத்தன்று இரவும் தங்கராஜ் குடிபோதையில் வந்து மனைவி புஷ்பாவிடம் தகராறு செய்துள்ளார்.
மறுநாள் காலையில் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தனர்.
இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் தங்க ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் இருந்த நான் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டேன். இதைப்பார்த்து எனது மனைவி, 2-வது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். அதன்பேரில் தங்கராஜ் மீது போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணையின் போது தங்கராஜ் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் தங்கராஜே தண்ணீர் தொட்டியில் தள்ளி அவர்களை மூச்சு திணறடித்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தே கிக்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற தண்ணீர் தொட்டிக்குள் குதித்த புஷ்பா, மூடியை மேலே தள்ளி விட்டு வெளியே வந்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் குடிபோதையில் இருந்த தங்கராஜ், மூடியை திறக்க முடியாதவாறு தடுத்து இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அதன் முடிவுகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும்.
பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற விவரம் தெரியவரும். அதன்பிறகே தங்கராஜ் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 3 பேரும் கொல்லப்பட்டது உறுதியாகும்பட்சத்தில் தங்கராஜ் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என போலீசார் தெரிவித்தனர்.
கைதான தங்கராஜ் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நஞ்சுண்டாபுரத்தில் அவர்களின் இறுதிச்சடங்குகள் நடந்தன.