நாமக்கல் அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 பேர் கைது
- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு மாற்றுபவர்களின் நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
- அதில், கட்டுகட்டாக ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகள் உள்பக்கமாக கருப்பு கலர் பேப்பர் வைத்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டத்தில் சிலர் கள்ள நோட்டினை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு மாற்றுபவர்களின் நடமாட்டத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
செல்போனில் பேச்சு
இந்நிலையில் கொல்லிமலை சோளக்காட்டை சேர்ந்தவர் செல்லத்துரை ( வயது 45). இவரும் கொல்லிமலை எல்லக்கிராய்பட்டியைச் சேர்ந்த சதாசிவம் (42), புத்தூர்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (36) ஆகிய 3 பேரும், சேந்தமங்கலம் பயணியர் மாளிகை அருகே காரில் வந்துள்ளனர். வெகுநேரமாக அங்கு நின்றபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர்.
கட்டு கட்டாக..
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அதில், கட்டுகட்டாக ரூ.7 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகள் உள்பக்கமாக கருப்பு கலர் பேப்பர் வைத்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இரட்டிப்பு பணம் மோசடி
அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான இந்த கள்ள நோட்டுகளை, இரட்டிப்பு பணம் தருவதாக சொல்லி மோசடி செய்து, மாற்றுவதற்காக காத்திருந்ததாக தெரிவித்தனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவதாக பல இடங்களில் இதுபோன்ற மோசடியில் இவர்கள் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
பறிமுதல்
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், ரூ.7 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் அவர்கள் வந்த கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் யாருக்காக இந்த பணத்தை கொண்டு வந்தார்கள்? இதற்கு முன் இவர்கள் மீது கள்ள நோட்டு மாற்றியது தொடர்பாக ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.