உள்ளூர் செய்திகள்

வடமாநில வாலிபர் உள்பட 3 பேர் சாவு

Published On 2023-02-08 09:10 GMT   |   Update On 2023-02-08 09:10 GMT
  • டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பாஸ்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம்:

சேலம் அழகாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 55). இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில், உடையாப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பாஸ்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது சகோதரர் மோகன் கொடுத்த புகார் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சேலம் மணியனூர் அருகே உள்ள நாட்டாமங்கலம் பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் பீகாரைச் சேர்ந்த வாலிபர் பரூன் சிங் (25), நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பரூன் சிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது சகோதரர் ரூபேந்திர சிங் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மன்னார்பாளையம் வாய்க்கால் பட்டறை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (35). இவர் நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில், காந்தி நகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக சென்றதால், நிலை தடுமாறு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் தினேஷை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ், நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தினேஷின் மனைவி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News