உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி அருகே கஞ்சா கடத்திய 3 இளைஞர்கள் கைது

Published On 2024-11-01 07:52 GMT   |   Update On 2024-11-01 07:52 GMT
  • போலீசார் 150 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
  • தப்பியோடிய ராகுல் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அறந்தாங்கி:

தீபாவளி பண்டிகையையொட்டி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குரும்பூர் மேடு அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் 150 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து 150 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பதும்,அதனை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றிருப்பதும் தெரிய வந்தது.

இதற்கிடையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரில் ஒருவர் தப்பியோடி விட்டார். காரிலிருந்த நாகராஜ் (வயது 20), தவமுருகன் (வயது 26), ஸ்டாலின் (வயது 36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பியோடிய ராகுல் என்பவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பண்டிகை நேரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News