உத்தரகாண்ட் நிலச்சரிவில் மீட்கப்பட்ட 30 பேர் நாளை சிதம்பரம் வருகை
- 30 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
- இன்று மாலை 5 மணியளவில் டெல்லி வந்தடைகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வசந்தா (வயது 58), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), பராசக்தி (75) உள்ளிட்ட 29 பேரும், கோவை பீளமேடு ரெயில் நிலைய மேலாளராக பணியாற்றி வரும் கோமதி சிவராமன் உள்பட 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலா சுக்கு ஆன்மிக பயணம் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி 29 பேர் கடந்த 1-ந் தேதி சிதம்பரத்தை சேர்ந்த கனகராஜ் தலைமை யில் சிதம்பரத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றனர். கோவை பீளமேடு ரெயில் நிலைய மேலாளர் கோமதி கோவை யில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.
பின்னர் 30 பேரும் டெல்லியில் இருந்து 2 வேன்கள் மூலம் இமயமலைக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சுற்றி பார்த்துவிட்டு, அனைவரும் உத்தரகாண்டில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
இதற்கிடையே உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் ஆதி கைலாஷ் பகுதிக்கு வேன்களில் புறப்பட்டனர்.
அப்போது பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்றபோது, ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் மழை வெள்ளத்தால் சாலையும் துண்டிக்கப்பட்டதால், 30 பேரும் ஆதி கைலாஷ் பகுதிக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் தவித்தனர்.
பின்னர் அவர்கள் பித்தோரகரில் உள்ள நாராயணா ஆசிரமத்தில் கடந்த 4 நாட்களாக தங்கியிருந்தனர். இருப்பினும் அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாததால், உதவி கேட்டு செல்போன் மூலம் கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசை தொடர்பு கொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன் பேரில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 30 பேரும் நேற்று காலை 11 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தட்சுல்லா பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை கொடுக்கப்பட்டது. பின்னர் 30 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்கள் வேன் மூலம் டெல்லி புறப்பட்டனர். அவர்கள் சுமார் 550 கி.மீ. தூரம் பயணம் செய்து இன்று மாலை 5 மணியளவில் டெல்லி வந்தடைகிறார்கள். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட உள்ளனர்.
இன்று நள்ளிரவு அல்லது நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவர்கள் சென்னை வந்தடைவார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10 மணியளவில் சிதம்பரம் வந்தடைகிறார்கள்.
நிலச்சரிவில் சிக்கிய 30 பேரும் மீட்கப்பட்டதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.