உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 30 டன் பூக்கள் குப்பையில் கொட்டப்படுகிறது

Published On 2023-10-12 06:15 GMT   |   Update On 2023-10-12 06:15 GMT
  • கடந்த 20நாட்களாக மார்கெட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் மார்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
  • வரக்கூடிய நாட்களில் மெல்ல மெல்ல பூ விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

போரூர்:

கோயம்பேடு, பூ மார்கெட்டுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 60-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் முகூர்த்தம், விஷேச நாட்கள், திருவிழாக்கள் ஏதும் இல்லை. இதனால் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது மேலும் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் தினசரி 20முதல்30டன் அளவிலான சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகி குப்பையில் கொட்டப்படுகிறது இதனால் பூ வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறியதாவது:

புரட்டாசி தொடங்கியது முதலே கடந்த 20நாட்களாக மார்கெட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் மார்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பூக்கள் தேவை குறைந்து உள்ள நிலையில் கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்கள் வரத்து வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அதை வாங்கி செல்ல வியாபாரிகள் யாரும் வரவில்லை.

இதனால் அதிகளவிலான பூக்கள் தேக்கமடைந்து குப்பையில் வீசபடுகிறது. வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அமாவாசை மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது அதன்பிறகு ஆயுதபூஜை வர உள்ளது. எனவே வரக்கூடிய நாட்களில் மெல்ல மெல்ல பூ விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

Tags:    

Similar News