ஒகேனக்கல்லில் 5 மாதங்களில் 31 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி
- தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் என 6 மொழிகளில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
- காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதால் சுழல் மற்றும் பாறையின் இடுக்குகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சாதாரண நாட்களை விட கோடை விடுமுறை காலத்தில் தான் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிகிறது.
இதனால் ஒகேனக்கல் பகுதியில் மே மாதம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே காட்சி அளித்தன. தற்போது பள்ளிகள் திறப்பு நாட்கள் தள்ளி போனதால் வருகிற 11-ந் தேதி வரை கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆலம்பாடி பரிசல் துறை, ஊட்டலை பரிசல் துறை, முதலைப்பண்ணை, நாகர்கோயில், கோத்திக் நாகர்கோயில், கோத்திக்கல் பரிசல்துறை, மாமரத்துகடவு உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க, தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி, ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தண்ணீரை கண்டதும் ஆசையில் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர்.
இதனால் ஆழமான பகுதி மற்றும் சுழல், பாறை இடுக்கில் சிக்கி உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கடந்த வாரம் பென்னாகரம் மருக்கலாம்பட்டியை சேர்ந்த தந்தை மகன் 2 பேரும் ஒகேனக்கல் ஆலம்பாடி காவேரி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
கடந்த மாதம் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சாமுண்டீஸ்வரி லே-அவுட் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சிவப்பா (37), நண்பர்களுடன் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தபோது அவர் ஆழமான பகுதியில் சென்று ஆற்றில் மூழ்கி இறந்தார்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சந்திரசேகரன் (36) என்பவரும் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தார்.
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நபர்கள் நீரில் மூழ்கி உயிரை இழக்கும் அபாயம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரங்கேறி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 31 பேர் இதுவரை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.
உயிர் பலியை தடுக்க, மாவட்ட நிர்வாகம் குளிக்க தடைவிதிக்கப்பட்ட இடங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் என 6 மொழிகளில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பலகையில், அபாயகரமான கூர்மையான வழுக்கும் பாறைகள் மிகுந்த பகுதியாகும். அதிக உயிரிழப்பு ஏற்படக்கூடிய பகுதி.
இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி குளித்தால், போலீசாரால் தண்டிக்கப்படுவீர்கள் என அந்த அறிவிப்பு பலகையில் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதால் சுழல் மற்றும் பாறையின் இடுக்குகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
கடந்த 5 மாதத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த உயிரிழப்பை தடுக்க ஆபத்தான முக்கிய இடங்களில் தமிழ் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 6 மொழிகளில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.
ரோந்து பணியில் போலீசார் கூடுதலாக ஈடுபட்டுள்ளனர் என்றனர்.