31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு
- புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகி உள்ளது.
- மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மன்னார்குடி:
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு பூந்தோட்டம் தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 285 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உலகராஜ், சிவராஜ் ஆகியோர் முது கலை இயற்பியல் ஆசிரியர் அன்பரசு வழிகாட்டுதலில், சமூக வலைதளங்களில் ஏற்படுகிற கற்றல் குறைபாடு எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.
இந்த கட்டுரை புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகி உள்ளது.
மன்னார்குடி பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் 80 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் சமூக வலைதளங்களில் செயல்பாட்டாளர்களாக இருப்பதும், அதற்காக தினமும் 5 மணி நேரம் வரை செலவிடுவதும் கண்டறியப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படுகிற உளவியல் பிரச்சனைகள் குறித்தும், கற்றல் குறைபாடு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும்,ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செல்போன்களை மாணவர்கள் பயன்படுத்தினால் அவை சுவிட்ச் ஆப் ஆகிவிடுவது போலவும், அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால் அதன் உயரும் வெப்ப நிலைக்கு தகுந்தவாறு அவை குறிப்பிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறி விடுவது போன்ற தீர்வுகள் ஆய்வில் முன்வைக்கப்பட்டது.
முடிவில் வெற்றிபெற்ற மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திலகர் பாராட்டினார்.