உள்ளூர் செய்திகள்

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூருக்கு 350 சிறப்பு பஸ்கள் -கலெக்டர் செந்தில்ராஜ் பேட்டி

Published On 2022-10-19 09:17 GMT   |   Update On 2022-10-19 09:17 GMT
  • திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி வருகிற 25-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
  • கோவில் வளாகத்தில் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

கலெக்டர் ஆய்வு

30-ந் தேதி சூரசம்ஹாரமும், 31-ந் தேதி திருக்கல்யாணமும் நடை பெறுகிறது. விழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து ஏற்கனவே அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் கோவிலில் பக்தர்களுக்காக நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்காலிக பந்தல்கள்

இவ்வாண்டு கோவில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 12 இடங்களில் 70 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தற்காலிக தங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 350 கழிப்பறைகளுடன், கூடுதலாக 100 தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு பணியில் 2729 காவலர்கள் மற்றும் 300 ஊர்க்காவல்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். கோவிலில் உள்ள 275 தூய்மைபணியாளர்கள், திருவிழாவிற்காக கூடுதலாக நியமிக்கப்பட்ட 175 தூய்மைபணியாளர்கள் மற்றும் நகராட்சி மூலம் 80 தூய்மைபணியாளர்கள் ஆகியோர் சுழற்சிமுறையில் தூய்மைபணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தீயணைப்புதுறையினர் தயார் நிலையில் பணியில் ஈடுபடுவர். கோவில் வளாகத்தில் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகிறது. மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. கோவில் அருகில் 800 கார்கள் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட வுள்ளது.

சிறப்பு பஸ்கள்

சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையை தூய்மை செய்வதற்கு சென்னையில் இருந்து ஒரு எந்திரம் கொண்டு வரப்படவுள்ளது. தற்போது வேளாண் பொறியியல் துறை எந்திரம் மூலம் கடற்கரையை சமப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பல்வேறு வழித்தடங்களில் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை, கோவை மற்றும் கேரளாவில் இருந்து அதிக பக்தர்கள் வருவதால் கூடுதலாக ெரயில்கள் இயக்கிட ெரயில்வே நிர்வாகத்திடம் கோரப்பட்டுள்ளது.

தற்போது 80 சி.சி.டி.வி. கண்காணிப்புகேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கோவில் வளாகம் முழுவதும் 50 கேமிராக்கள் பொறுத்தப்படும். அதே போல் 3 டிரோன் காமிராக்கள் மூலம் கடற்கரை முழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் புஹாரி, டி.எஸ்.பி.ஆவுடையப்பன், மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், தாசில்தார் சுவாமிநாதன், துணை தாசில்தார் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்வேல், தாலுகா காவல் ஆய்வாளர் முரளிதரன், நகராட்சி ஆணையர் வேலவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News