உள்ளூர் செய்திகள்

ஊட்டியை மாநகராட்சியாக்க எதிர்ப்பு தெரிவித்து 36 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2024-07-11 04:37 GMT   |   Update On 2024-07-11 04:37 GMT
  • பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • கிராம மக்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி:

ஊட்டி நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும் என கருதி ஊட்டி நகராட்சி யை மாநகராட்சியாக தரம் உயர்த்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த மாதம் 5-ந்தேதி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஆணையாளர் ஏசுராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

அதன்படி ஊட்டி நகராட்சியுடன் அருகில் உள்ள கேத்தி, இத்தலார் பேரூராட்சி, உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட 36 கிராம மக்கள் நேற்று இத்தலாரில் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தலார் பஜார் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் ஹாலன் தலைமை தாங்கினார். நாக்குபெட்டா நலச்சங்க செயலாளர் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக போராட்டத்தில் பங்கேற்றார்.

இதுதொடர்பாக கிராம தலைவர் ஹாலன் கூறும்போது, `ஊட்டியை மாநகராட்சியாக மாற்றி இத்தலார் ஊராட்சியை அதனுடன் இணைக்க ஊராட்சி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இத்தலார் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் அரசு மூலம் வருமானம் தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும். எனவே ஊட்டி நகராட்சியுடன் இத்தலாரை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்' என்றார்.

Tags:    

Similar News