திண்டுக்கல் வாலிபர் கொலை வழக்கில் சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
- வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வினோத் (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் வினோத் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு தனது வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே புகுந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வினோத்தை சரமாரியாக வெட்டினர்.
அடுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது தாய் தனது மகனின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்ப்பதற்குள் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் இருந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் எஸ்.பி.பிரதீப், புறநகர் டி.எஸ்.பி. உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் வினோத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. கொலை செய்யப்பட்ட வினோத் கடந்த 8.5.2020ந் தேதி திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் சிறையில் இருந்து ஜாமீனில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்தார். எனவே பழிக்கு பழியாக சுள்ளான் ரமேசின் ஆதரவாளர்கள் இந்த கொலையை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை தொடர்பாக சூர்யா (19) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இதில் மற்ற 4 பேரும் 17 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஆவர். வீடு புகுந்து பழிக்கு பழியாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்
மேட்டுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.