உள்ளூர் செய்திகள்

காட்டு யானைகள் தாக்கியதால் சேதமான ரேஷன் கடையை படத்தில் காணலாம்.

வால்பாறை அருகே ரேஷன் கடையை சூறையாடிய 5 காட்டு யானைகள்

Published On 2024-02-22 10:04 GMT   |   Update On 2024-02-22 10:04 GMT
  • கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை கூட்டம்-கூட்டமாக தின்று சேதப்படுத்தியது.
  • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 5 காட்டு யானைகளையும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் அவை அங்குள்ள ஆற்றங்கரையோரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் நேற்று நள்ளிரவு நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்கு வந்தது. பின்னர் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை தாக்கி ஜன்னல், கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை கூட்டம்-கூட்டமாக தின்று சேதப்படுத்தியது.

நள்ளிரவு நேரத்தில் யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு பொதுமக்கள் விழித்து தெருவுக்கு வந்து பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் ரேஷன் கடையை சூறையாடிக்கொண்டு இருந்தன. தொடர்ந்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 5 காட்டு யானைகளையும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டு யானைகள் புகுந்து ரேஷன் கடையை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகளை வராமல் தடுக்கவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News