கோவை சரகத்தில் 529 போக்சோ வழக்குகள் பதிவு
- சிறுமிகள், சிறுவர்களிடம் யாரேனும் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- யாரேனும் பொய் புகார் அளித்தால் அவர்களுக்கும் 6 மாதம் வரை தண்டனை கிடைக்கும்.
கோவை,
18 வயதுக்குட்பட்ட சிறுமிகள், சிறுவர்களிடம் யாரேனும் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடந்த 2012-ம் ஆண்டு முதல் போக்சோ சட்டப்பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. விரைவில் ஜாமீனில் வெளியே வர முடியாது. எனவே, யாரேனும் பொய் புகார் அளித்தால் அவர்களுக்கும் 6 மாதம் வரை தண்டனை கிடைக்கும்.
மேலும் போக்சோ சட்டம் குறித்து பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் என கருதி பெற்றோர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க முன்வராமல் இருந்தனர்.
எனவே, இந்த சட்டத்திருத்தத்தில் பாதிக்கப்படுபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் வெளியே தெரியக்கூடாது, ரகசியமாக விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் அதிகளவில் போலீஸ் நிலையங்களில் வர தொடங்கின. அவர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. கோவை சரகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு போக்சோ வழக்குகள் அதிகமாக உள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
போக்சோ வழக்குகள் குறித்து முன்பைவிட தற்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, புகார் அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு கோவை சரகமான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் 431 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக இந்த ஆண்டு 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று கடந்த ஆண்டு 17 பேருக்கு போக்சோ வழக்கில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 87 பேருக்கு போக்சோ வழக்கில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.