உள்ளூர் செய்திகள் (District)

விக்கிரவாண்டி அருகே மேய்ச்சலுக்கு சென்ற 6 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலி

Published On 2024-07-07 05:22 GMT   |   Update On 2024-07-07 05:22 GMT
  • வருவாய்த்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மாடுகளை பார்வையிட்டு விசாரணை.
  • உடற்கூராய்வுக்காக நேமூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே தென்பேர் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி ஜெயலட்சுமி (வயது55). இவர் நேற்று காலை மேய்ச்சலுக்காக தனது 11 மாடுகளை அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவரின் வயலில் விட்டிருந்தார்.

இந்த நிலையில் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இந்த மின்கம்பியை அங்கு மேய்ந்து கொண்டிருந்த 6 மாடுகள் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 6 மாடுகளும் செத்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரிய தச்சூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மாடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் இணைப்பை துண்டித்து இறந்த மாடுகளை உடற்கூராய்வுக்காக நேமூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரிய தச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News