உள்ளூர் செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் `திடீர்' ரத்து

Published On 2024-09-03 06:54 GMT   |   Update On 2024-09-03 09:41 GMT
  • இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஆலந்தூர்:

லண்டனில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வரும் அதே விமானம் மீண்டும் அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் செல்லும். அந்த விமானத்தில் இன்று லண்டன் செல்வதற்காக 284 பயணிகள், சென்னை விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

ஆனால் லண்டனில் இருந்து வர வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயக்கப்படவில்லை. இதனால் இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ரத்து செய்யப்ப டுவதாக அறிவிக்கப்பட்டது.

அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். லண்டன் செல்லும் விமானம் நாளை (புதன்கிழமை) அதிகாலை, சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதைப்போல் சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு, அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1.30 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் விமானம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை 7.05 மணிக்கு வரவேண்டிய பயணிகள் விமானம், மதியம் 1 மணிக்கு அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் ஆகிய 4 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் லண்டன், அந்தமான், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் வருகை, புறப்பாடு என மொத்தம் 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News